மேஜர் லீக்கின் சம்பியனானது கொல்ட்ஸ்

2025 ஆம் 26 ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற மேஜர் லீக் 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்ட்ஸ் கிரிக்கெட் அணி சம்பியனானது. இந்த தொடரில் 16 அணிகள் 2 குழுக்களாக மோதின. இந்த இரு குழுக்களிலிருந்தும் தலா 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டு சுப்பர் 8 சுற்றில் மோதின. சுப்பர் 8 சுற்றில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை பெற்று சம்பியனானது. கொல்ட்ஸ் அணி 7 போட்டிகளில் 1 வெற்றி 6 சமநிலையான முடிவுகளுடன் 72.765 புள்ளிகளை பெற்று சம்பியனானது.

இந்த தொடரின் கொல்ட்ஸ் அணியின் இறுதிப்போட்டி NCC அணியுடன் கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்ட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய NCC அணி 89.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் கமில் மிஷார ஆட்டமிழக்காமல் 187(192) ஓட்டங்களையும், லஹிரு உதார 94(107) ஓட்டங்களையும், கவிந்து பத்திரன 30(72) ஓட்டங்களையும் பெற்றனர்.

கொல்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் கவிஷ்க அஞ்சுல 4 விக்கெட்களையும், அகில தனஞ்சய 3 விக்கெட்களையும், சனோஜ் தர்ஷிக 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கொல்ட்ஸ் அணி 113 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 441 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 144(177) ஓட்டங்களையும், சனோஜ் தர்ஷிக ஆட்டமிழக்காமல் 100(186) ஓட்டங்களையும், சங்கீத் கூரே 40(85) ஓட்டங்களையும், தனஞ்ஜய லக்ஷன் 30(30) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன, லசித் எம்புல்தெனிய, ஷக்தி உதார ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பாடிய NCC அணி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் லஹிரு உதார ஆட்டமிழக்காமல் 100(90) ஓட்டங்களையும், வினுக்க ரூபசிங்க ஆட்டமிழக்காமல் 61(72) ஓட்டங்களையும் பெற்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version