அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மற்றும் கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு,

“ இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஹஜ் பெருநாள் என்பது பண்டிகை என்பதற்கு அப்பால், தியாகம், அர்ப்பணிப்பு, சமத்துவம் மற்றும் பிறர் மீதான கருணை ஆகிய உன்னத மனித விழுமியங்களை உலகிற்குப் பறைசாற்றும் புனித நாளாகும்.

நமது நாடு தற்போது ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த கால சவால்களைக் கடந்து, அனைத்து மக்களுக்கும் சமத்துவமும் நீதியும் கிடைக்கும் வகையிலான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் கட்டியெழுப்பி வருகிறோம்.

இந்த புதிய பயணத்தில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் எமது இஸ்லாமிய உறவுகள் ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, எமது கடற்றொழில் மற்றும் கடல்சார் பொருளாதாரத் துறையில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் உழைப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெருந்தூணாக விளங்குகின்றது.

இனம், மதம் மற்றும் மொழி கடந்த ஒருமைப்பாடே ஒரு நாட்டின் உண்மையான பலமாகும். பல்லின சமூகங்கள் வாழும் எமது இலங்கையில் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றது.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் அவர்களின் கலாசார உரிமைகளை உறுதி செய்வதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

எவ்வித அச்சமுமின்றி, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களது மதக் கடமைகளையும் வாழ்வாதாரத்தையும் முன்னெடுப்பதற்கான முழுமையான பாதுகாப்புச் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் போதே நாட்டின் இறையாண்மையும் அமைதியும் நிலைபெறும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

மீண்டுமொரு முறை அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிஷாந்தன்
ஊடக செயலாளர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version