மலையகத்தில் போதை தடுப்பு – ஜீவன் நடவடிக்கை.

மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் ஈடுபடாது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் ஜீவன் மேலும் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நேற்று(07.12) காலை ஹட்டன் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.

நடைபெற்ற சந்திப்பில் பொலிசார் தரப்பில் மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் குழு அமைத்து பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிக்க கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிததுள்ளார் .

அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கட்டளையை மீறும் பட்சத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மலையக தோட்டப் பகுதிகள் மற்றும் நகர் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபடாது இ.தொ.கா அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பொலிசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தொழிலார் காங்கிரசின் செயலாளரான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

அதேநேரத்தில் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்படும் தொழிற்சங்க பிணக்குகளுக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், தொழிற்சங்கங்கள் அவற்றை பார்த்துக்கொள்ளும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

தொழிற்சங்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் தோட்டங்களுக்கு பொலிசார் செல்லும் முன் விடயம் தொடர்பில் இ.தொ.காவுக்கு தெரிவித்து அனுமதி பெற்று செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version