ஒரு ஓட்டத்தில் வெற்றியைத் தவறவிட்ட பெங்களூரு அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றியீட்டியது. 

பெங்களூரு அணிக்கு போட்டியின் இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பெங்களூரு அணி சார்பில் களத்திலிருந்த லோகி பெர்குசன் ஒரு ஓட்டத்தினை மற்றும் பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

கொல்கத்தாவில் இன்று(21.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கொல்கத்தா அணி சார்பில் அணி தலைவர் சிரேயாஸ் ஐயர் 50 ஓட்டங்களையும், பில் சால்ட் 14 பந்துகளில் 48 ஓட்டங்களையும், ஆன்ட்ரே ரசல் 27 ஓட்டங்களையும், ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் யாஷ் தயால் மற்றும் கமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் லோகி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டினையும்  பெற்றுக்கொண்டனர். 

223 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

பெங்களூரு அணி சார்பில் வில் ஜேக்ஸ் 55 ஓட்டங்களையும், ராஜட் பட்டிதார் 52 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 25 ஓட்டங்களையும், கரன் சர்மா 7 பந்துகளில் 20 ஓட்டங்களையும் மற்றும் விராட் கோலி 7 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் ஆன்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆன்ட்ரே ரசல் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறியதுடன், பெங்களூரு அணி 2 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version