இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை இலங்கை அணி மகளிர் அணி 3 – 0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. இன்று(21.06) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றியீட்டியதன் ஊடாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வெள்ளையடித்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவது போட்டி காலியில் இன்று(21.06) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில், சமரி அத்தபத்து 91 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 63 ஓட்டங்களையும், அனுஷா சன்ஜீவனி 55 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில், கே ராம்ஹராக் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
276 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், செடியன் நெஷன் 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், சச்சினி நிசன்சலா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணியின் சச்சினி நிசன்சலா தெரிவு செய்யப்பட்டார்.