போட்டியை சமன் செய்த இலங்கை இளையோர் அணி 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி எதிர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

போட்டியின் இறுதி நாளான இன்று(11.07) இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டி நிறைவடைந்தது. 

அதன்படி, இந்த போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 269 ஓட்டங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் இறுதி நாளான இன்று சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சாருஜன் சண்முகநாதன் 2வது இன்னிங்ஸிற்காக 73(118) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

இங்கிலாந்து, வார்ம்ஸ்லியில் கடந்த 08ம் திகதி ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இளையோர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 85.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தினுர கலுப்பஹான 103(144) ஓட்டங்களையும், நெதன் கல்டெரா 55(114) ஓட்டங்களையும், தினிரு அபேவிக்ரம 43(60) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் எஎம் பிரென்ச் 4 விக்கெட்டுக்களையும், என் சர்மா, அலெக்ஸ் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தின் போது 72.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஃப்ரெடி மெக்கான் 92(114) ஓட்டங்களையும், கேஷன பொன்சேகா 86(149) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் பிரவீன் மனிஷ 6 விக்கெட்டுக்களையும், விஹாஸ் தெவ்மிக 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

77 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி, போட்டியின் இறுதி நாள் ஆட்டநேர முடிவின் போது 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் சாருஜன் சண்முகநாதன் 73(118) ஓட்டங்களையும், புலிந்து பெரேரா 34(53) ஓட்டங்களையும், கயன வீரசிங்க 33(73) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜெய்டன் டென்லி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. தொடரின் 2வது போட்டி எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version