பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கங்கா செனவிரத்ன நீச்சல் போட்டிகளில் மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவின் முதல் சுற்று போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இன்று(29.07) நடைபெற்ற போட்டியில் கங்கா செனவிரத்ன 1:04:26 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தை பெற்றுள்ள போதும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவில் ஏனைய சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற வீராங்களைகள் குறைந்தளவு நேரத்தில் போட்டியை நிறைவு செய்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இதேவேளை, நீச்சல் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவில் இலங்கையின் கைல் அபேசிங்க பங்கேற்கும் முதல் சுற்றுப் போட்டி நாளை(30.07) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பகல் 02.53 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்க பங்கேற்கும் ஆரம்பகட்ட போட்டிகளில் இரண்டாவதும் இறுதியுமான போட்டியும் நாளை(28.07) இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வீரேன் நெட்டசிங்க, ஆரம்பகட்ட போட்டிகளில் முதல் போட்டியில் உலகத் தரவரிசையில் 7ம் இடத்திலுள்ள மலேசியாவின் Zii Jia Lee யிடம் தோல்வியுற்றார். ஆடவருக்கான பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்திலுள்ள வீரர்கள் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஒலிம்பிக் போட்டிகளில் தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் சீனா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளடங்களாக 9 பதக்கங்களுடன் முதலிடத்திலுள்ளது.
அவுஸ்ரேலியா 4 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.