இலங்கை A அணிக்கும் தென்னாப்பிரிக்க A அணிக்கும் இடையில் நேற்று (04.09) தென்னாப்பிரிக்காவின் சென்வேஸ் பார்க் போட்ச்சேப்ஸ்ட்ரூம் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க A அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை A அணி சார்பாக துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 94 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேலையில் டேவால்ட் ப்ரேவிஸ் இன் பந்து வீச்சில் பீட்டர் இடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 4ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்க 54 பந்துகளில் 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
தென்னாப்பிரிக்க A அணி சார்பாகப் பந்து வீச்சில் டேவால்ட் ப்ரேவிஸ் 10 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 46 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றிக்கொண்டார்.
309 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க A அணி 42.5 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது.
இதில் தென்னாப்பிரிக்க A அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டாவிட் பெடிங்கம் 129 பந்துகளில் 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை A அணி சார்பாகப் பந்து வீச்சில் துஷான் ஹேமந்த 9.5 ஓவர்களுக்கு 58 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றிக்கொண்டார்.
தென்னாப்பிரிக்க A அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை A அணி முதலிரண்டு போட்டிகைளையும் வெற்றிகொண்டிருந்த நிலையில் இரண்டுக்கு ஒன்று எனும் அடிப்படையில் தொடரைத் தன்வசப்படுத்திக்கொண்டது.
போட்டியின் நாயகன் விருதினை தென்னாப்பிரிக்க A அணி சார்பாக 129 பந்திகளில் 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட டாவிட் பெடிங்கம் பெற்றுக்கொண்டார். தொடர் நாயகனாக இலங்கை A அணியின் லஹிரு உதார தெரிவு செய்யப்பட்டார்.