மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (14.09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 46 தேர்தல் சட்ட விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேர்தல் வன்முறைகள் இடம்பெறவில்லை.
வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவை 81 வலயங்களாக செயற்படுத்தப்படுகின்றன.வாக்களிப்பு நிலையங்களின் தூரங்கள்,மக்கள் தொகைகளைக்கொண்டு இந்த வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அதற்கு பொறுப்பாக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்ட விதிமுறை மீறல்களாக இடமாற்றம்,பதிவு உயர்வு, சுவரொட்டிகள் ஒட்டிய முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர்.கட்சி அலுவலகத்தில் மட்டும் அதுவும் குறிப்பிட்ட அளவிலேயே சுவரொட்டிகளை ஒட்டமுடியும்” என கூறினார்.