வவுனியாவில் 5 நாட்களுக்கான கொரோனா உடல்கள் தேக்கத்தில்

வவுனியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இறந்தவர்களின் உடல்கள் 5 நாட்களாக எரியூட்டப்படாமல் காணப்படுவதாகவும், வவுனியாவில் இறப்பவர்களை இயன்றளவு வேகமாக தகனம் செய்வதற்கு முயற்சி செய்வதாகவும் கெளதமன் வி தமிழுக்கு தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உடல்கள் வருவதனால் தாமதம் ஏற்படுவதாகவும், முடிந்தளவு விரைவாக எரியூட்ட முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் கொரோனாவுடன் போராடி பல வேலைகளை மக்களுக்காக செய்துவருகிற போதும் மக்கள் அசமந்தமாக செயற்படுவது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்தார். வவுனியாவில் இறப்புகள் அதிகரித்துள்ளன. நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். கடைகளில் வியாபாரங்களை செய்கின்றனர். இவற்றை பார்த்து நடவடிக்கை எடுக்க ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.இப்படியான நேரங்களில் மக்கள் தாமாகவே புரிந்துணர்வோடும், சுய கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும் எனவும் நகரசபை தலைவர் இ.கெளதமன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியாவில் 5 நாட்களுக்கான கொரோனா உடல்கள் தேக்கத்தில்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version