தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில், இன்று (19) முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் இதயமாகக் கருதப்படுகிறது என, தெரிவித்த ஜனாதிபதி
அவர்கள், “எளிமையான பணிகளில்கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும். ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது” என மேலும் தெரிவித்தார்.
நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.
இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும். பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த 316 கெடெட் அதிகாரிகள் இன்று விடைபெற்று வெளியேறினர். இலங்கை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து 02 வருடங்களும் 09 மாத காலமும் “இராணுவ கல்வி இளங்கலைப் பட்டப் பாடநெறியை” தொடர்ந்த 73 பேரும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 150 பட்டதாரிகளும், 61 தொண்டர் கெடெட் அதிகாரிகளும், 15 பெண் தொண்டர் கெடெட் அதிகாரிகளும், சேம்பியா, மாலைதீவு மற்றும் ருவண்டா குடியரசுகளில் இருந்து வருகை தந்து பயிற்சிகளைப் பெற்ற 06 கெடெட் அதிகாரிகளும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பயிற்சிப் பெற்ற இலங்கை மாணவப் படை அதிகாரிகள் 05 பேரும் இதில் அடங்குவர்.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவத் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.