சட்ட விரோத கடல் தொழில் முறையில் ஈடுபடுவது, யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இலங்கை கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் துன்பத்தில் வாட்டும் செயற்பாடு என்பதை தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (21/12) யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கும் போதே குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும், அதே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிப்பதாக கூறியுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.