‘மலையக பிரச்சினைகள் சர்வதேச மட்டங்களுக்கு உயர்த்தப்படும்’ – மனோ MP

மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் தனக்கு இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நாட்டில் வாழும் வட கிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரம் கோர்த்து, சிங்கள சகோதர மக்களுடனும் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சினைகளை போல் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு கொண்டு செல்வதே, இன்றைய தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில், எமது நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை சரியாக புரிந்துக்கொண்டு மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

அதற்கமைய இன்று (31/12) கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் நடைபெறும் இறுதி சுற்று பேச்சுகளில் இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன்.

மேலும், ஐநா பேரவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐநா என சகோதர மக்களுடன் கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகி உள்ளது.

கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் அன்று எடுத்த முடிவு சரியானதே. தனிநாடு என்ற இலக்கை மலையக தமிழ் மக்கள் ஏற்க முடியாது என அவர் முடிவெடுத்தார். அதேவேளை, பொது நோக்கங்களில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்து செயற்பட்டார். சௌமியமூர்த்தி தொண்டமான் கடைபிடித்த கொள்கைகளையே நானும் கடை பிடிக்கிறேன். அதேபோல் நண்பர் சந்திரசேகரன் கடைபிடித்த கொள்கைகளையே நான் கடைபிடிக்கிறேன்.

இன்று எமது பொது நோக்கு நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற இலக்கு இல்லை. ஆயுத போராட்டம் என்பதும் இங்கில்லை. எங்கள் தந்தை நாடான இந்தியா, எங்கள் தாய் நாடான இலங்கையுடன், பிரிபடாத நாட்டுக்குள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்படுத்திகொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் இன்று கோருகிறோம். இது எமது பிரச்சினைகளுக்கு முழுமையான அரசியல் தீர்வு அல்ல எனவும் கூறுகிறோம்.

'மலையக பிரச்சினைகள் சர்வதேச மட்டங்களுக்கு உயர்த்தப்படும்' - மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version