ரம்புக்கணை போராட்ட காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடாத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கேகாலை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடாத்தப்பட்டுள்ளமையினை மருத்துவ துறையினர் உறுதி செய்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களுடன், துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவு இட்டவர்களையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கணை பகுதியில் எரிபொருள் காவு வண்டியினை தடுத்து, புகையிரத போக்குவரத்தினையும், வீதி போக்குவரத்தினையும் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்களை கலைய செய்வதறகு வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு செய்ய உத்தரவிட்டதாகவும், எரிபொருள் காவு வண்டியினை எரியூட்ட முயற்சித்த வேளையில் முழங்காலுக்கு கீழே துப்பாக்கி சூடு நடாத்த உத்தரவிட்டதாகவும் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.