இன்று 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது போன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் பாரளுமன்றம் கூடுவதனால் இன்றைய அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
பிரதமர் ரணிலுக்கு முக்கிய கட்சிகள் தங்கள் ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளமையினால் சிக்கல் நிலைகள் ஏற்படாதென நம்பலாம். இன்றைய அமர்வில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. பெண் ஒருவரை பிரதி சபாநாயகராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்க கோரியுள்ளமையினால் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக ரோஹிணி கவிரட்ன பரிந்துரை செய்யப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக அஜித் ராஜபக்ஷ பரிந்துரை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய அமர்வில் ஜனாதிபதி மீது விருப்பமின்மை தொடர்பிலான பிரேரணை பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்பபடுமென அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பாரளுமன்ற அமர்வு பல சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருந்தன. போராட்ட காரர்கள் பாரளுமன்றத்தை சூழ போராட்டங்களை நடாத்தியிருந்தனர். அத்தோடு சில பாரளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவதிலும் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.
இந்த சூழலில் இன்று பாராளுமன்றத்துக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற முன்புற வீதியான பொல்துவ சந்தியிலிருந்து தியத்து உயன வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மீண்டும் பாரளுமன்றம் கூடும் போது தாம் பாராளுமன்றத்துக்கு முன்னதாக போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருந்த போதும் இன்று அவ்வாறான சூழ்நிலைகள் எதுவும் இதுவரையில் அந்த பகுதியில் காணப்படவில்லை.
