24 ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் ஒழுங்குபடுத்தப்படாதென ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சங்கத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சின் செயலாளரின் தகவலை அடிப்படையாக வைத்து “ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படும்” என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 24 ஆம் திகதி விலையேற்றம் நடைபெறுமெனவும், 60 ரூபாவிலும் அதிகமாக விலை அதிகரிப்பு ஏற்படலாமெனவும் நம்பப்படுகிறது.
92 ரக பெற்றோல் 74 ரூபாவினாலும், 95 ரக பெட்ரோல் 78 ரூபாவினாலும், டீசல் 56 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 210 ரூபாவினாலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். ஆகவே பொறுப்பானவர்கள் விலையேற்றம் நடைபெறும் வரை எரிபொருளினை விநியோகிக்கும் வாய்ப்புகள் இல்லையென நம்பப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 5,500 மெட்ரிக் தொன் பெற்றோலும், 11,000 மெட்ரிக் தொன் டீசலுமே கையிருப்பில் உள்ளன. நேற்றைய தினம் வருகை தந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் வருகை தந்துள்ளது. ஒரு நாளுக்கு 6,000 மெற்றிக் தொன் டீசலும், 5,000 மெற்றிக் தொன் டீசலும் சீரான விநியோகத்துக்கு தினமும் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இனி எரிபொருள் வருகை தருவதற்கு இல்லையெனவும், இதுவரை 13 கப்பல்களில் 520,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் இதுவரை வருகை தந்துள்ளதாக ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். டீசல் விநியோகம் குறைக்கப்பட்டால், வாழ்நாளில் காணாத வரிசையினை காண முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
