இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாளிலும் இந்தியா அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.
இங்கிலாந்து அணி, ஜொனி பாஸ்டோவின் சதம் மூலமாக மோசமான பின்னடைவிலிருந்து தப்பித்துக் கொண்டது. இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் இந்தியா அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாகவே இழந்துள்ளது. புஜாரா, ரிஷாப் பான்ட் ஆகியோர் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி வருகின்றனர்.
இந்தியா அணி மூன்றாம் நாளான நேற்றைய(03.07) ஆட்ட நேர முடிவில் 45 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்தியா அணி 257 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்படுகிறது.
இதில் செட்டேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். விராத் கோலி 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்கள்.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 61.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது. ஜொனி பாஸ்டோவ் 106 ஓட்டங்களையும், சாம் பில்லிங்ஸ் 36 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்களையும், மொகாமட் ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்சின் ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியா அணி பின் மத்திய வரிசையின் அபார துடுப்பாட்டம் மூலம் மீள் வருகை ஒன்றை பெற்றது. ரிஷாப் பான்டின் அதிரடி துடுப்பாட்டம், ஜடேஜாவின் சதம், ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனை மூலமும் பலமான ஓட்ட எண்ணிகையினை பெற்றது.
ஜஸ்பிரிட் டெஸ்ட் போட்டி ஒன்றின் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட கூடுதலான ஓட்டங்களான 28 ஓட்டங்கள் என்ற பிரைன் லாரா, ஜோர்ஜ் பெய்லி ஆகியோருடைய சாதனைகளை முறியடித்து 29 ஓட்டங்களை ஸ்டுவோர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சில் பெற்றுக்கொண்டார் . துடுப்பின் மூலம் பும்ரா 29 ஓட்டங்களை பெற்றார். ஸ்டுவோர்ட் ப்ரோட் உதிரி ஓட்டங்களோடு 35 ஓட்டங்களை ஒரு வழங்கினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்தியா அணி 84.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 416 ஓட்டங்களை பெற்றது.ரிஷாப் பான்ட் 111 பந்துகளில் 146 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரவீந்தர் ஜடேஜா 104 ஓட்டங்களையும், பும்ரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 5 விக்கெட்களையும், மத்தியு பொட்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்த போட்டியில் இந்தியா தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டால் தொடர் வெற்றி காத்திருக்கிறது.