கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான நாகேந்திரராஜா புவனேஷ்.
கொரோனா தொற்று நிலையில் ஒருவருக்கு பக்கத்தில் செல்லவே பலர் பயப்படும் நிலையில் இவர் செய்த துணிச்சலான காரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு அவர் நல்ல ஒரு கருத்தையும் தனது முகப்புத்தகத்தில் முன் வைத்துள்ளார்.
புவனேஷ் போன்ற இளைஞர்களை அரச உயர் பீடங்கள் கெளரவிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். இவர் போன்ற இன்னும் பல இளைஞர்கள் இவ்வாறு செய்ய முற்படுவார்கள்.
இந்த செய்தியினை பலருக்கும் கொண்டு சேர்த்து இவரின் முயற்சிக்கும், சேவைக்கும் பாராட்டுகளை அனைவரும் வழங்க வேண்டுமென வி தமிழ் கேட்டுக்கொள்கிறது. எமது பாராட்டுகளையும் புவனேஷ்க்கு தெரிவித்துக்கொள்கிறது.
நடந்த சம்பவம் தொடர்பில் புவனேஷ் தெரிவித்துள்ளது கீழ்வருமாறு
நேற்று இரவு 10 மணியளவில் சம்பவம்..
நான் வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அதுருகிரிய பாதையில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்துநின்றதை கண்டு, நானும் அருகில் சென்றேன்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு லொறியில் மோதி இரத்தம் ஓட விழுந்து கிடப்பதையும் பின்னால் வந்த சுமார் 18 வயதுடைய மகன் கதறி அழுவதையும் கண்டேன். அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் உயிர் போய்விட்டது என்று எனக்கு ஒரு சந்தேகம் .
அருகில் சென்று நாடித்துடிப்பை பார்த்து துடிப்பு இருப்பதை அறிந்து நான் உடனே மற்றவர்களை விலக சொல்லி மார்பு பகுதியை அழுத்தி அழுத்தி பக்கத்தில் இருந்தவரை விழுந்து கிடப்பவரின் வாயில் காற்றை அனுப்ப சொல்லி விடாமல் முயற்சித்தேன்.
ஒரு 10 நிமிடம் என்னுடைய முயற்சி தொடர ஒரு சிறிய இருமலோடு அசைய ஆரம்பித்தார். உடனே எனக்கு தெரிந்த வைத்திய நண்பர் ஒருவரை தொடர்புகொள்ள முயற்சித்தேன் அவர் அழைப்பில் இல்லை.
அருக்கு என்னால் முடிந்த வார்த்தைகளை சொல்லி சொல்லி சமாதான படுத்த அம்புலன்ஸ் வந்தடைந்தது இடத்திற்கு .
உடனே அவர்கள் அவர்களுடைய சேவையை ஆரம்பித்தனர் .
அந்த மகன் உட்பட அங்கு இருந்தவர்கள் என்னிடம் கைகூப்பி கும்பிட்டு ” ஒயாட கோடாக் பிங் மஹத்யா ” (உங்களுக்கு கோடி புண்ணியம்)
என்று சொல்ல கண்கள் கலங்கியது.
நான் சொல்வது அங்கு முதல் உதவி பற்றி பலருக்கு தெரிந்து இருந்தாலும் கூட முன்வர யோசித்து இருப்பார்கள். அல்லது தெரியாமல் இருந்திருக்கும் .
என்னுடைய யோசனை வாகன அனுமதி பத்திரம் பெறும் போது இதுபோன்ற விடயங்களில் கூடுதலான கவனம், பரிட்சை கேள்விகளில் இவ்வகையான கேள்விகள் அதிகமாக சேர்த்தால் காப்பாற்ற முடிந்த உயிர்களை மீட்கலாம் .
காரணம் அதிகமான ஆபத்தான நேரங்களில் எம்மிடம் குறைந்தது ஒரு சாரதி இருப்பார்.
