காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் மற்றும் அவற்றிற்கு தீங்கு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மைய நாட்களில் புத்தல – கதிர்காமம் வீதியில் மற்றும் உடவலவ, ஹபரணை போன்ற இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகளால் பயணிகளுடன் சென்ற பல வாகனங்கள் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அதிகளவில் தாம் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துளளார்.
எனவே, இந்த வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள், விலங்குகளுக்கு உணவளிப்பதாலேயே இவ்வாறான வியாபித்துகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களை குறைப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, புத்தள – கதிர்காமம் வீதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு கடந்த நான்கு நாட்களாக யால வனத் தள காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், வாகன விபத்துக்களை தடுக்க, பல ஒழுங்குமுறைகளும் கையாளப்படுகின்றன.
புத்தல – கதிர்காமம் வீதியில் கடந்த நான்கு நாட்களாக இவ்வாறான பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால், காட்டு யானைகள் வீதியை நோக்கி வருவதை நிறுத்தியுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை இனி தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.