பாணந்துறை பின்வத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபானசாலைகள் மற்றும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமையாளரான, கடவத்தை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய, அனுராத சம்பத் குதாகொட எனப்படும் வர்த்தகர் ஒருவர் கடந்த பெப்ரவரி 28ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி மற்றும் 08 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வாத்துவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 40 வயதுடைய கினிமலகஹ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன்,
கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.