சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் தொடர்பில் அவதானம் தேவை!

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால் எதிர்காலத்தில் அபாயகரமான சூழல்கள் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (25.04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் தினமும் 10,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. எனினும், சுமத்ரா தீவு மற்றும் இந்தியப் பெருங்கடலைச் சுற்றி பதிவாகும் நிலநடுக்கங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும், மேலும், இந்திய டெக்டோனிக் தட்டின் வடக்கு முனையில் உள்ள இமயமலை போன்ற சில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களை நம்மால் உணர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் உட்பகுதிகளில் குறிப்பாக புத்தல, வெல்லவாய, கிரிந்த, ஹம்பாந்தோட்டை மற்றும் மத்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் தரவுகளை ஆராய்ந்த பின்னர், எமது நாட்டில் நில அதிர்வுகளை முன்னறிவிக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். எனினும் இதுவரையில் நாட்டில் பலம்வாய்ந்த நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர், இந்த நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டன. இந்த சமிக்ஞை கோபுரங்கள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் ஒத்திகை நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன, எனவே, சுனாமி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட தெரியும் என்பதால் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உருவாக்கிக்கொள்ள தேவை இல்லை என தாம் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அண்மைய காலங்களில் சமீபத்தில் சமிஞ்சை கோபுரங்களின் ஒத்திகை நிகழ்ச்சி திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதால் இவை முறையாக பராமரிக்கப்படுகிறதா, செயல்படுகிறதா, பேட்டரிகள் சரியாக சார்ஜ் செய்யப்படுகிறதா, சிக்னல்கள், ஹாரன்கள் வேலை செய்கிறதா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என தாம் கருதுவதாகவும், சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் இயக்கப்படாவிட்டால், நள்ளிரவில் ஏதேனும் அனர்த்தம் நேர்ந்தால் பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு எதுவும் நிகழாது என்பதை எவரும் சொல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த எச்சரிக்கை கோபுரங்களின் செயலில் உள்ள நிலையை சரிபார்க்க இதுவே சிறந்த நேரம். இந்த கோபுரங்கள் தற்போது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட பொறுப்பு துறையினர் கண்டறிய வேண்டும்.

தற்போது, ​​நாட்டில் பல இடங்களில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு அளவீடுகள் இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிறுவப்பட வேண்டும் தாம் கோரிக்கை விடுப்பதாகவும், கடலில் கூட இந்த கருவிகளை பொருத்த முடியும் எனவும், மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆழ்கடலில் ஏற்படும் நிலநடுக்கங்களால் நமக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஆழம் குறைந்த கடலில் ஏற்படும் நிலநடுக்கங்களால் சுனாமி போன்ற அபாயகரமான அனர்த்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply