IPL கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது தெரிவுகான் போட்டி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
குழு நிலையில் முதலிடம் பெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. நான்காமிடத்தை பெற்றுக்கொண்ட கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிபோட்டிக்கு தெரிவாகியுள்ளது. முதல் நான்கு இடங்களுக்குள் வருமா என்ற சந்தேகத்துடன் காணப்பட்ட கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியோடு நான்கு தொடர்ச்சியான வெற்றிகளை கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. மூன்றாவது தடவையாக கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் 36(39), ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 30(27) ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 2 (4-26) விக்கெட்களை, சிவம் மாவி, லுக்கி பெர்குசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்று, 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் 55(40) ஓட்டங்களையும், சுப்மன் கில் 46(46)ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 96 ஓட்டங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
பந்துவீச்சில் ககிஸோ ரபாடா, அன்றிச் நோக்கியா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், அவிஸ் கான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
கொல்கொத்தா அணி இலகுவாக வெற்றி பெறும் வாய்ப்பு காணப்பட்ட போதும், தேவையற்ற ரீதியில் விக்கெட்களை இழந்து அழுத்தத்தின் மத்தியில் வெற்றி பெற்றது.
சென்னை சுப்பர் கிங்ஸ்,கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.