தற்போது ஆடசியிலுள்ள அரசாங்கம் கடுமையாக விலைகளை ஏற்றியுள்ள நிலையில் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
விலை வாசிகளை குறைப்பதற்கு உடனடியாக அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்க வேண்டுமெனவும், வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு பதாதைகள் மக்களால் காட்சிப்படுத்தப்பட்ட அதேவேளை, கோஷங்களும் எழுப்பப்பட்டன.
தோட்ட தொழிலார்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படவில்லை, வேலை இறுக்கமாக்கப்பட்டுள்ளதனால் தொழிலார்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளகின்றனர். தோட்ட உரிமையாளர்களின் அடாவடிகளுக்கு முடிவு கட்டப்படவேண்டுமெனவும் இந்த போராட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.