இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ வல்லுநர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் இடம்பெயர்வதைத் தெரிவு செய்ததாலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டதாலும், மற்றும் ஓய்வுபெறும் மருத்துவர்களின் வயதெல்லை போன்ற காரணிகளாலும், பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்காண தவறும் பட்சத்தில், அடுத்த ஆண்டுக்குள், தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் உள்ள 18 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களில் ஒன்பது பேர் சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல இதய அறுவை சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெறும் வயது சலுகையை 60லிருந்து 63 ஆக மாற்றுவது நியாயமற்றது என 176 சிறப்பு மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.