அஹங்கமவில் பொலிஸாரை தாக்கிய கும்பல் கைது!

அஹங்கம பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சடடவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப்பின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 375 மில்லி சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகரை தடியால் தாக்கிய நபர் சம்பவத்தின் பின்னர் கடலில் பணிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply