மிஹிந்தலை ரஜமஹா விகாரை மின் துண்டிப்பிற்கு சஜித் கண்டனம்!

இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மிஹிது தேரரின் பாதம் தொட்ட வரலாற்று சிறப்பு மிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அரசாங்கம் பாரிய மின் கட்டணத்தை சுமத்தியிருந்ததுடன், அதன் காரணமாக மகா சங்கத்தினர் மற்றும் விகாராதிபதிகள் அனைவரும் பெரும் அழுத்தத்திற்கும் சிரமத்துக்கும் உள்ளாகியுள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரரேமதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் மிஹிந்தலை விகாரைக்கு விஜயம் செய்த போது சங்கைக்குரிய பிரதம தேரரை சந்தித்து உரிய மின்கட்டணத்தை செலுத்துவதுவதற்கு இணங்கியதுடன் எதிர்வரும் ஊர்வலங்களுக்கான மின்கட்டணத்தையும் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடல் முடிந்து இரண்டு நாட்களுக்குள் குறித்த பகுதியில் மின்வெட்டு அமுற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல வருடங்களாக பணம் செலுத்தாமல் குவிந்துள்ள அரசாங்கத்தின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிப்பது பற்றி  சிந்திக்காத பின்னணியில் மிஹிந்தலை புனித பூமியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வழங்கிய வாக்குறுதியை செயலால் நிரூபிப்பதும் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் எங்கள் கொள்கையாகும் என்பதுடன் சங்கைக்குரிய பிரதம தே​​ரரை சந்தித்து நாங்கள் வழங்கிய வாக்குறுதியை இரண்டு நாட்களில் நிறைவேற்றி  வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் 41 இலட்சம் மின்சார கட்டணத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் கொடையாளர்களின் அன்பளிப்புடன் செலுத்தப்பட்டது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் நாகரீகத்தை போசித்த ஒரு வரலாற்று மையத்தின் சமய, கலாச்சார மற்றும் சமூகப் பணியை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது, அத்தகைய இடங்களுக்கு முடிந்தவரை ஆதரவை வழங்குவது நமது பொறுப்பு என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன் எனவும், மதம்,நெறி, வரலாறு, கலாசாரம் போன்றவற்றை சந்தர்ப்பவாதத்திற்கு மாத்திரம் பயன்படுத்தும் இந்த அரசாங்கம், இவ்வாறான சமய வழிபாட்டுத் தலங்களுக்குச் செய்யும் கவனிப்பாரற்ற தன்மை மூலம் தனது உண்மைத் தன்மையை நிரூபித்துள்ளதுடன், பௌத்த மற்றும் ஏனைய சமயத் தலங்களுக்கு இழைக்கப்படும் கோழைத்தனமான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply