1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கியது இந்திரா காந்தி அரசுதான் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீவு பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்படுவதாக ‘எகனாமிக் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும், 1974-ல் பிரதமர் பதவியிலிருந்த இந்திரா காந்தி “இந்தோ-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சத்தீவை இலங்கைப் பிரதேசமாக இருக்க அனுமதித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”இந்தியத் தாயை அரசியலுக்காக இவர்கள் மூன்றாகப் பிரித்துள்ளார்கள்” என மக்களவையில் காரசாரமாக பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது காங்கிரஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கச்சத்தீவை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தமிழக தி.மு.க அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஒரு தீவு. யாரோ அதை வேறு நாட்டுக்குக் கொடுத்தாலும் அது, இந்திரா காந்தியின் தலைமையிலேயே நடந்தது என அவர் தெரிவித்துள்ளார்.