திருகோணமலை, ஜமாலியா பகுதியில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (23.08) பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தமை அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீனவர் எனவும், பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்டையால் தன கழுத்தை நெரித்துக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸார் தாக்கியதாலே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்றிரவு ஜமாலியா பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (24.08) காலை குறித்த இளைஞனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு குடும்பத்தினர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து, சடலத்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகலள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது.