நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான டெலோ, புளொட் ஆகியவற்றுடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆகிய கட்சிகள் பங்குபற்றியிருந்தன.
இந்த கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்திருக்கவில்லை. இது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினை தொடர்பு கொண்ட கேட்டபோது பின்வருமாறு அவர் தெரிவித்தார்.
“இந்த கூட்டத்தினை நாம் ஒத்திவைக்குமாறு கேட்டிருந்தோம். 13 ஆம் திருந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் விடயம். இந்த விடயம் தொடர்பாக நாம் கவனமாக கையாள வேண்டும். 32 வருடங்களாக இந்த விடயம் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விடயம் பற்றி பேச ஆராய காலம் தேவை. அதன் காரணமாகவே நாம் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த கலந்துரையாடல் தேவையில்லை என நாம் கூறவுமில்லை. இதில் கலந்து கொள்ளவில்லை என்றதும் எமக்குள் பிரிவினைகள் என்று கூற வேண்டாம். என தெரிவித்த மாவை சேனாதிராசா,
சம்மந்தன் அவர்கள் இது தொடர்பில் இந்திய தூதுவரோடு பேசியுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் இந்த விடயம் தொடர்பில் நடைமுறை செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் அண்மையில் கலந்துரையாடி சென்றுள்ளார்.
அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைளை எடுக்கப்போகிறது என்பதிலும், 13 ஆம் திருத்த சட்டம் வெளி வந்த பின்னரே அதில் என்ன விடயங்கள் உள்ளன என தெரிய வரும். அதன் பின்னரே நாம் அதில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் பேச முடியும், கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது (கூட்டுறவு அடிப்படையிலான சமஸ்டி” எனும் விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் இப்போதைக்கு கலந்துரையாடலல் தேவையில்லை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வி மீடியாவுக்கு தெரிவித்தார்.