கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெற்ற “Factum” வெளியுறவுக் கொள்கை மீளாய்வு வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார் என எதிர்க்கட்சி தலைவர் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பில் கருத்தாய்வை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இராஜதந்திர விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து தனது உரையில் கருத்து தெரிவித்தார்.
சமூக நீதிக்கு முன்னுரிமை வழங்கி இலங்கையில் மனிதாபிமான முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையின் எதிர்கால தீர்மானங்களுக்கு “Factum” வழங்கும் பங்களிப்பை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“Factum”ஆசிய பசுபிக் சார்ந்த,பிராந்திய மற்றும் உலகலாவிய அரசியல்,பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களிலும் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர நிபுணர்களை உள்ளடக்கிய துறைசார் குழுக்களுடன் சுயாதீனமானதும் ஆழமானதுமான பகுப்பாய்வுகளை நடத்தி வரும் வெளிவிவகாரக் கொள்கை சார்ந்த ஆய்வமாகும்.
இந்நிகழ்விற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.