சீனாவில் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதற் கட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. நேற்று(20.09) நடைபெற்ற படகோட்டப் போட்டியில் மஹேசி லியனகே வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 2000 மீட்டர் தூரத்தினை 8 நிமிடம் 53.68 செக்கன்களில் நிறைவு செய்து அவரோடு போட்டியிட்ட சவுதி வீராங்கனையை வெற்றி பெற்றுள்ளார்.
இருவர் இணைந்து போட்டியிடும் படகோட்டப் போட்டியில் மஹேஷி லியனகே-ஜயானி ஹிருணிகா ஆகியோர் ஐந்தாமிடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்களுக்கான படகோட்டப் போட்டியில் மொஹமட் நபிரான் நான்காமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளார். அவர் நுவான் சம்பத்துடன் இணைந்து பங்குபற்றிய இரட்டையர் படகோட்டப் போட்டியில் நான்காமிடத்தை பெற்று கொண்டதனால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
மகளிர் கடற்கரை கரப்பந்து போட்டியில் இலங்கை அணி சீனாவிடம் 2-0 என முதற் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இரண்டாம் போட்டியில் கஷகஸ்தான் அணியுடன் கடுமையாக போராடி 1-2 என தோல்வியடைந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 23 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வோடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது. இருப்பினும் முன்னோடிப் போட்டிகள் ஏற்கவனே ஆரம்பித்துள்ளன.