நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!

தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்தோட்டை லிட்டில்வேலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட பின்னர் நேற்று (11.10) மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் பாலத்தை கடக்க முயன்ற மாணவனே வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளான்.

நேற்று (11.10) இரவு முதல் கலஹா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாடசாலை மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுதுவெல்ல கிராமசேவைக்குட்பட்ட இந்த ஓடையின் குறுக்கே நான்கு மின்கம்பங்களை பயன்படுத்தி கிராம மக்களால் கட்டப்பட்டுள்ள குறித்த பாதுகாப்பற்ற சிறிய பாலத்தை சிறு குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்து நாளாந்தம் கடந்து செல்கின்றமையும் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply