ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரை தடுத்தால் பொலிஸாருக்கு சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று (16/11) வருகைதரவுள்ள பொதுமக்களை வீதியில் நிறுத்தி அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்று வரை செல்ல நேரிடுமென ஐக்கிய மக்கள் சக்தியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி வழியில் முன்னெடுக்கப்படும் தமது ஆர்ப்பாட்டத்திற்கு வருகைதரும் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்று வரை கொண்டு செல்லும் நிலையில், அவர்களது பதவியுயர்வு போன்ற விடயங்களில் அது பாரிய தாக்கத்தினை செலுத்தும் என்பதனை அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்று (16/11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதில் கட்சி உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, முஜிபூர் ரஹ்மான், ஹரின் பெர்ணான்டோ உட்பட பலர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதன்போது கருத்துரைத்த ராஜித சேனாரத்ன, இன்று தமது கட்சியினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு நாடு முழுவதும் பொலிஸாரை வீதியில் இறக்கி தடை விதித்துள்ளமையே தமக்கு கிடைத்த பெரும்வெற்றியாகும் என்றும், பொலிஸார் வீதிகளில் செல்லும் பொதுமக்களை அவர்களது வாகனங்களை நிறுத்தி இடையூறு விளைவிப்பதானது அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாடுகள் என்றும், இதனால் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த ஏனைய கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர், தற்போதைய அரசாங்கம் பின்னோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும், இன்றுடன் அணைத்தும் முடிவதில்லை, மாறாக இன்றிலிருந்து தான் சகல விடயங்களும் ஆரம்பிக்கின்றனவெனவும், அரசாங்கம் கருத்து சுதந்திரம், அடிப்படை மனித உரிமை மீறல் ஆகிய செயற்பாடுகளை தமது கட்சிக்கு எதிராக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரை தடுத்தால் பொலிஸாருக்கு சிக்கல்

Social Share

Leave a Reply