இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான ஒருதலைப்பட்ச தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றதுடன், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
இதன்போது, ஆரம்பத்தில் தன்னாட்சி சம்பள சீர்திருத்தங்களுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய அண்மைய இலங்கை மத்திய வங்கி சட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக கட்சித் தலைவர்கள் ஒரு புதிரான அம்சத்தை எடுத்துக் காட்டியுள்ளனர்.
இது போன்ற எந்தவொரு சம்பள மாற்றங்களுக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அனுமதி தேவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய சட்டமானது மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அதிக சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சுயாதீனமான தீர்மானங்களின் அடிப்படையில் சம்பள அதிகரிப்புக்கான பொறிமுறையை அது கவனக்குறைவாக தவிர்த்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சட்டத்தின் 5, 8, மற்றும் 23 ஆகிய பிரிவுகள் அத்தகைய ஏற்பாடுகளை வழங்குகின்றன என்பதை கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், தேசிய நெருக்கடியின் போது சம்பளத்தை உயர்த்துவது நெறிமுறை ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என கட்சித் தலைவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பை வௌயிட்டனர்
மத்திய வங்கியின் இந்த சம்பள உயர்வால் மாதத்திற்கு சுமார் 232 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என தெரியவந்துள்ளது.