தென்னாப்பிரிக்கா மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணி

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது.

இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

தென்னாப்பிரிக்காவில் நேற்று(03) நடைபெற்ற, தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியதன் ஊடாக தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

தொடரின் மூன்றாவது போட்டியின் போது, இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அணித் தலைவி லாரா வோல்வார்ட் 56 ஓட்டங்களையும் டி கிளார்க் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக கைப்பற்றிக் கொண்டார். 

156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோர் இரண்டாவது விக்கெட்டிற்காக 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். 

சமரி அத்தபத்து 73 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல்  54 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். 

போட்டியி ஆட்ட நாயகியாக இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டார். 

தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றியீட்டியருந்த போதும், மற்றைய இரண்டு போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணி தொடரையும் கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ஒரு நாள் தொடர் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply