அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று (16) பார்வையிட்ட பின் உடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன், முகநூலில் பகிர்ந்த பதிவின் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்து வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நபர் சுமார் 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தான் கைது செய்யப்பட்டுள்ளமையினால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருப்பதாகவும் தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் முன்னாள் போராளி கோரிக்கை விடுத்தாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களது குரல்வளையை நசுக்கி தமிழர்களை தமது கொத்தடிமைகளாக வைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸாரும் இனவாதமாக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்தவர்ணன் உட்பட ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.