இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது.
கௌகாத்தியில் இன்று(15.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் அணி சார்பில் ரியான் பராக் 48 ஓட்டங்களையும், அஸ்வின் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கரன், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
145 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. பஞ்சாப் அணி சார்பில் அணித் தலைவர் சாம் கரன் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் அவேஷ் கான், சலால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணித் தலைவர் சாம் கரன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளது.
ராஜஸ்தான் அணி முன்னதாகவே Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள போதும், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளமை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.