திருமண வாழ்வில் மனக்கசப்பு; என்ன செய்யலாம்?

திருமணத்திற்கு முன் நீங்களும் உங்கள் துணையும் பொருத்தமான ஜோடி என நினைத்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்குப் பின், எதிர்பார்த்த விதத்தில் மணவாழ்க்கை அமையாததை நினைத்து மனக்கசப்பு அடைந்திருப்பீர்கள்.

ஆனால் இதற்காகவெல்லாம் யாரும் கவலை கொள்ளாதீர்கள். சந்தோஷம் மேலோங்கும் மணவாழ்வை சகலராலும் அனுபவிக்க முடியும். அதற்கு முதலில் மனக்கசப்பு ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தினசரி ஒரே வேலையை மாத்திரம் திரும்ப திரும்ப செய்வது. அதாவது வீட்டு வேலை, பிள்ளை வளர்ப்பு, துணையின் உறவுகளோடு ஏற்படும் முரண்பாடுகள் இவையெல்லாம் திருமண வாழ்வின் அமைதி மற்றும் ஆழத்தை கொஞ்சம் கொஞ்சமாக மங்கச் செய்யலாம். அல்லது பணப் பிரச்சினை, தீராத நோயினால் அவதிப்படும் குடும்பத்தாரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு போன்ற எதிர்பாராத திருப்பங்களும் உங்கள் திருமண பந்தத்தை சீர்குலைக்கலாம்.

இருவருக்கும் ஒத்தேவராது என நினைக்கும்போது சந்தர்ப்பங்களும் பல தோன்றி மறையும். காதலிக்கும் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் பெரிதாகத் தெரியாதிருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவைப் வெளிச்சம் போட்ட மாதிரி தெரிய ஆரம்பிக்கும். முன்பு துரும்புபோல் தெரிந்த வித்தியாசங்கள் இப்போது பூதாகரமாகத் தோன்றலாம்.

அடுத்தாக துணையின் உணர்வுகளை மதிக்காமல் இருக்கும்போதும் அதிக பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் மனதை ரணமாக்கும் வார்த்தைகள், அன்பற்ற தன்மை, தீர்க்கப்படாத மனஸ்தாபங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை மெல்ல மெல்ல இளக்கிவிடும். இதனால், கணவனோ மனைவியோ தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமலேயே இருந்து விடுகிறார்கள். சில சமயத்தில், துணையல்லாத ஒருவரோடு நெருக்கமாகப் பழகவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

இத்தகைய மனக்கசப்புகள் ஒன்று சேர்ந்து அன்றாடம் நம்மில் ஏற்படுத்தும் நாளாந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கலாம்? அதற்காக நீங்கள் என்ன செய்யலாம்?

முதலில் துணையின் நல்ல குணங்களை உற்று நோக்குங்கள். உங்கள் துணையை ஆசை ஆசையாகத் திருமணம் செய்துகொண்ட நினைவுகளை அடிக்கடி மீட்டிப் பாருங்கள். இப்படிச் செய்வது, குறைகளைப் பொறுத்துக்கொள்ளவும் குடும்பத்தில் சமாதானமாக இருக்கவும் துணையின் மீதான பாசத்தை அதிகப்படுத்தவும் நிச்சயமாக உதவி புரியும்.

அடுத்து, ஒன்றாக நேரம் செலவிட திட்டமிடுங்கள். திருமணத்திற்குமுன், நீங்கள் ஒருவேளை ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட்டிருப்பீர்கள். காதலித்த சமயத்தில் இருவரும் மனம்விட்டு பேச நேரம் ஒதுக்கியிருப்பீர்கள், அது உங்களுக்குச் சந்தோஷத்தை அளித்திருக்கும். திருமணத்திற்குப் பின், பிள்ளைகள் சந்ததி என உண்டான பின்னர் வெளியில் செல்வதற்கு அல்லது மனம்விட்டு பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் தடைபடுவது வழக்கமாக விடுகின்றன. எனினும் முடிந்த அளவு இரவு தூக்கத்திற்கு முன்னரோ இருவரும் மனம் விட்டுப் பேச யோசியுங்கள். நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுவது, உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை இளக்கி நெருக்கத்தைக் கூட்டும். எதிர்பாராத பிரச்சினைகளைச் சமாளிக்க தைரியத்தையும் அளிக்கும்.

உங்கள் உணர்வுகளை மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் துணையின் சொல்லோ அல்லது செயலோ உங்களைப் புண்படுத்தியிருந்தால் அவரை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், கோபித்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைப்பற்றி உங்கள் துணையிடம் சாந்தமாகப் பேசுங்கள்; முடிந்தால் அந்த நாளே அதைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய உணர்ச்சிகளையும் துணையின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும், புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் இருவருமே நடந்திருக்க மாட்டீர்கள். இதை எடுத்துச் சொல்லி உங்கள் துணையிடம் மனதார மன்னிப்பு கேளுங்கள். ஒருவரையொருவர் புண்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப்பற்றி இருவருமே கலந்து பேசுங்கள். நிச்சயம் இவற்றை செய்து பாருங்கள். உங்களது திருமண வாழ்வில் நீங்கள் உணர்ந்து வந்த மனக்கசப்புகள் காணாமல் போய்விடும்.

திருமண வாழ்வில் மனக்கசப்பு; என்ன செய்யலாம்?

Social Share

Leave a Reply