சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் கணிப்புகளுக்கமைய, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 2.2% வளர்ச்சியடைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நாட்டின் பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடும்போது, இவ்வாறு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை சாதனைக்குரிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் அவதானமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.