இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்குக்கும், இலங்கை மகளிர் அணிக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இன்று(24.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அணித் தலைவி ஹேய்லி மெத்தியுஸ் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் அணித் தலைவி சமரி அத்தபத்து 4 விக்கெட்டுக்களையும், இனோஷி பிரயதர்ஷினி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
135 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன, ஹர்ஷதா சமரவிக்ரம ஆகியோர் தலா 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அஃபி பிளெட்சர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளது.