டெங்கு வளர்ப்பு அபிவிருத்தியா? – மன்னாரில் மக்கள் போராட்டம் 

மன்னார், பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதனை எதிர்க்கும் முகமாக ஆலயங்களுக்கு சொந்தமான மற்றும் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு கடந்த 25ம் திகதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை பெற்று நில அளவை செய்யும் பணி கடந்த 26ம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கும் மற்றும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் எதிராக, மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள்,தொடர்ந்தும் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேசாலை பகுதியில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவை பெற்று, பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதனை கண்டித்து மன்னார், பேசாலையில் கடந்த 26ம் திகதி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

ஏந்தியிருந்த பதாதைகளில் ‘70,000 மக்களை மன்னார் தீவிலிருந்து வெளியேற்றும் திட்டமா?’ ‘நாட்டின் அபிவிருத்தி என்று கூறி மன்னார் தீவை அழிப்பதா?’ ‘எமது பாரம்பரிய காணிகளை அபகரிக்காதே வெளியேறு’  ‘நீரோடைகளை அடைத்து டெங்கு வளர்ப்பதும் அபிவிருத்தியா?’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply