பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் ஆரம்ப சுற்றில்(Heat 5) இலங்கையின் அருண தர்ஷன மூன்றாம் இடத்தை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று(04.08) இரவு நடைபெற்ற இந்த ஓட்டப் போட்டியை 44:49 வினாடிகளில் நிறைவு செய்த அருண தர்ஷன மூன்றாம் இடத்தை கைப்பற்றினார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும்.
1997ம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுவோகாவில், சுகத் திலகரத்னேவிற்கு பின்னர் 400 மீட்டர் ஓட்டத்தை 45 வினாடிகளுக்குள் நிறைவு செய்த இலங்கை தடகள வீரராக அருண பதிவானார். இம்முறை ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தின் ஆரம்ப சுற்றில் சிறந்த நேரத்தை பதிவு செய்த 17வது வீரராகவும் காணப்படுகின்றார்.
அருண பங்கேற்ற ஓட்டத்தின் முதலாம் இடத்தை கிரெனடா நாட்டை சேர்ந்த கிராணி ஜேம்ஸ் பெற்றுக்கொண்டார்.
இதுவரை 2024 ஒலிம்பிக்கில், போட்டியொன்றில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே இலங்கை வீரராகவும் அருண காணப்படுகின்றார். ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்று நாளை(06.08) இரவு 11.05 மணிக்கு நடைபெறவுள்ளது.