அபார ஆரம்பத்தை சொதப்பிய இலங்கை அணி

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இணைந்து 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பத்தும் நிஸ்ஸங்க 45(65) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அவிஸ்கவுடன் ஜோடி சேர்ந்த குஷல் மென்டிஸ் நல்ல இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். இருவரும் 82 ஓட்ட இணைப்பாடங்களை பூர்த்தி செய்த வேளையில் அவிஷ்க 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 2021 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாச மைதானத்தில் வைத்து 118 ஓட்டங்களை பெற்றதன் பின்னர் 17 ஆவது இன்னிங்சில் பெற்றுக்கொண்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்த மூவரின் துடுப்பாட்டமும் இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.

இன்று நான்காமிலக்கத்தில் சரித் அசலங்க துடுப்பாட களமிறங்கினார். ஆனால் இன்றும் அவரின் துடுப்பாட்டம் சொதப்பியது. 10 ஓட்டங்களோடு ரியான் பராக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் முதற் பந்தில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்க இலங்கை அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. இலங்கையின் வழமையான விக்கெட்கள் வீழ்ந்தால் அடுத்தடுத்து வீழும் சிக்கல் இன்றும் உருவானது.

குஷல் மென்டிஸ் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்து சென்றார். இருப்பினும் புதிதாக துடுப்பாட்ட வந்த ஜனித் லியனகே சரியான இணைப்பாட்டத்தை வழங்கவில்லை. 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 25 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்கள் இலங்கை அணிக்கு வீழ்ந்தன. கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் கைகொடுத்த டுனித் வெல்லாளகே இந்தப் போட்டியில் கைவிட்டார். 02 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். 28 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்கள் வீழ்ந்தன. குஷல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ் ஆகியோர் இணைந்து போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கைக்கு இலங்கை அணியை கொண்டு சென்றனர். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்கமால் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றார். அவரின் இறுதி நேர துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு கைகொடுத்தது.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. கடந்த இரண்டு போட்டிகள் போன்றும் இந்த ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தி இந்தியா அணியை வெல்வது இலங்கைக்கு இலகுவாகஅமையாது.

இன்றைய போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்ட ரியான் பராக் 09 ஓவர்கள் பந்துவீசி 54 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். அவரின் சர்வதேசப் போட்டி அறிமுகம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தியா அணியின் பந்துவீச்சில் மொகமட் சிராஜ் 09 ஓவர்கள் பந்துவீசி 78 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 10 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். வொசிங்டன் சுந்தர் 08 ஓவர்களில் 29 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த தொடரின் முதற் போட்டி போட்டி இரு அணிகளுக்குமிடையில் சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் இலங்கை வசமாகும். இந்தியா அணி வென்றால் தொடர் சமநிலையில் நிறைவடையும். இவ்வாறான சூழலில் இன்றைய போட்டி விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அணி இந்தியா அணியுடன் தொடரை வென்றதில்லை.

அணி விபரம்

இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய நீக்கப்பட்டு, மஹீஸ் தீக்ஷண அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி சார்பாக லோகேஷ் ராகுல், அர்ஷீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, ரிஷாப் பாண்ட், ரியான் பராக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, டுனித் வெல்லாளஹே, மஹீஸ் தீக்ஷண, அசித்த பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ்

இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரியான் பராக், மொஹமட் சிராஜ்

Social Share

Leave a Reply