மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மட்டக்களப்பு, ஏறாவூர்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கையடக்க தொலைப்பேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களின் பெற்றோரினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையக் குறித்த பாடசாலை அதிபர் நேற்று (21.08) இரவு கைது செய்யப்பட்டதாக ஏறாவூர்பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் 3 பெண் மாணவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். புலமைப்பரிசில்பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவர்களுக்குப் பாடசாலை முடிவுற்ற பின்னர், பாடசாலை அதிபர் மாலையில் கற்பித்து வந்துள்ளார்

இதன்போது, குறித்த அதிபர் கையடக்க தொலைப்பேசியிலிருந்து ஆபாசப் படங்களை மாணவர்களுக்குக் காண்பித்துள்ளார். 

குறித்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், மாலை நேரத்தில் நடைபெறும் மேலதிக வகுப்புக்குச் செல்ல இயலாது எனப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மாணவியிடம் காரணத்தைக் கேட்ட போது, அதிபரின் செயல் தொடர்பில் கூறியுள்ளார். 

பின்னர், பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, 57 வயதுடைய குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply