“என்னை பற்றி எதுவேணும் என்றால் சொல்லுங்கள். என்ன பெயர் வைத்து என்னவென்றாலும் சொல்லுங்கள். அதனை நான் பார்த்துக்கொள்வேன். கணக்கெடுக்க மாட்டேன். ஆனால் நான் பிரதிநித்துவம் செய்யும் மக்களை, இனத்தை, சமூகத்தை, யாரும் அவமானபப்டுத்தினால் சும்மா இருக்க மாட்டேன். நான் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(28.08) ஜனனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கொழும்பில் நடைபெற்ற வேளையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்ட தலைவராக விஷ்வா என அழைக்கப்படும் விக்னேஸ்வரன், செயலாளராக குலேந்திரன் கணேசன், பொருளாளராக முத்தையா கிருஷ்ணகுமார், செயற்குழு உறுப்பினராக மகாலிங்கம் கருப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அத்தோடு ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சுப்பரணியம் சசிகுமார் கண்டி மாவட்ட செயற்குழுவுக்கும், கட்சி தலைமைக்குமான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தெரணியகலை அமைப்பாளருமான முருகேசு பரணீதரனும் கலந்து கொண்டனர்.
“கண்டி மாவட்ட தமிழ் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் நாம் கடும் பாடுபட்ட போராடி பெற்ற ஒரு நியாயமான பிரதிநிதித்துவம் ஆகும். இதை எவரும் தனிப்பட்ட ரீதியில் உரிமை கொள்ள இயலாது. இது கண்டி மாவட்ட ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் உரித்தானது. கண்டியிலுள்ள முஸ்லிம், சிங்கள நண்பர்களும் கைகொடுத்த இந்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தனர். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அனர்த்தம் மூலம் விழிப்படைந்து 2015 ஆம் ஆண்டு வாக்களித்து இதனை வழங்கினார்கள். கண்டி மாவட்ட தமிழ் மக்கள் வீரநடை போடுகின்றனர். எந்தவொரு சதிகார சக்தியும், விலைபோகும் சக்தியும் அதனை தடுத்து விட முடியாது. கண்டி மக்களின் சொத்து இது. கண்டி மக்கள் சார்பாக பாராளுன்றம் அடங்கலாக மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் தமிழ் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். கட்சியை விட்டு போனவர்கள் உருப்பட்டதாக சரித்திரமில்லை. முடிந்தவற்றை விட்டு நடக்கபோவதனை கதைப்போம்” என மனோ கணேசன் குறித்த நிகழ்வில் மேலும் கூறினார்
“ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குகிறது. நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அதில் கண்டி மாவட்ட மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்” எனவும் மனோ மேலும் தெரிவித்தார்.
“இலங்கை வரலாற்றில் பல சண்டை சச்சரவுகள் இடம்பற்றுள்ளன. இனியும் நடைபெறும் என்றே எதிர்பார்க்கிறேன். பாரளுமன்றத்திலும் இவ்வாறு நடைபெற்றது. ஊடக நிகழ்வுகளிலும் நடைபெறுகின்றன. இதுவல்ல பிரச்சினை. இவற்றில் அவதானம் செலுத்த வேண்டாம். கட்சி மாறுவார்கள் பற்றி பேசவேண்டும். கட்சிக்கும், மக்களுக்கும் துரோகங்கள் செய்பவர்களை பற்றி பேசுங்கள். விலை போனவர்கள் பற்றி பேசுங்கள். இதனை திரை போட்டு அந்த விடயங்களை மறைக்காதீர்கள்” என பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுக்குமார்-திகாம்பரம் மோதல் தொடர்பில் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்தார்.