கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய, இரண்டாவது துப்பாக்கி தாரிக்கும், கார் சாரதிக்கும் அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கி தாரியும், கார் சாரதியும் பாணந்துறை பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று(28.08) கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலி, நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.