அனுபவமுள்ள தலைவரின் பின்னால் அணிதிரள்வோம் – ராமேஷ்வரன்

அனுபவமுள்ள தலைவரின் பின்னால் அணிதிரள்வோம் - ராமேஷ்வரன்

மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை கிடைக்கப்பெற்றதாக
என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பூண்டுலோயா ஹெரோவ் தோட்டப் பகுதியில் இன்று (07.09) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எமது மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ள ஜனாதிபதி காணி உரிமை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளார். எனவே, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்யமாட்டார் என எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் பிரசாரம் போலி என்பது உறுதியாகின்றது.

ஆறு பேர் அல்ல இரண்டுபேர் இருந்தால்கூட மக்கள் ஆதரவுடன் பேரம்பேசி உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கும் வல்லமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது. அன்று முதல் இன்றுவரை இதனை நாம் நிரூபித்துவருகின்றோம்.

தனது தந்தை குடியுரிமை, வாக்குரிமை வழங்கினார் எனக் கூறிக்கொண்டு ஒருவர் வலம் வருகின்றார். எமது பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் அன்று முன்னெடுக்கப்பட்ட அகிம்சைவழி போராட்டத்தின் பிரதிபலனாகவே இந்த உரிமைகள் கிடைக்கப்பெற்றன. மாறாக எவரும் தங்கதட்டில் வைத்து இவற்றை தரவில்லை. அவரின் தந்தையைக்கூட எமது பெருந்தலைவரே காப்பாற்றினார் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதுமட்டுமல்ல பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே முழுமையாக முற்றுப்புள்ளி வைத்தார் என்பதையும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எனவே, மலையக மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தக்கூடிய அதேபோல செய்யக்கூடிய வகையிலான உறுதிமொழிகளை வழங்கியுள்ள தலைவரை ஆதரிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஜனாதிபதிக்கே வாக்களிக்க வேண்டும்.

நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலாகும். எனவே, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த அனுபவமுள்ள ஒரு தலைவரின் பின்னால் அணிதிரள்வோம். அப்போதுதான் நாடும், நாமும் மேம்பட முடியும்.” – என்றார்.

Social Share

Leave a Reply