தொழில் சார் கல்வியை தெரிவுசெய்யும்போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று காலை (24.11) நாரஹேன்பிட்டி நிபுணத்தா இல்லத்தில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே உத்தியோகபூர்வமாக பணிகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
“கல்வியானது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய விடயப்பரப்பாகும். கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி என கருதப்பட்டாலும் இம்மூன்றும் ஒருங்கிணைந்து செல்லவேண்டிய முழுமையான கல்விக் கட்டமைப்பின் மூன்று பிரிவுகளாகும். முக்கியமாக தொழிற்கல்வி தொடர்பில் எமது அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்துகின்றது. தொழிற்கல்வியை வேறு ஏதும் தொழில்கள் செய்ய முடியாது எஞ்சுகின்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்ற துறையாகவே பார்க்கப்படுவதே எமது நாட்டின் சம்பிரதாயம். இத்தகைய கருத்தானது நிச்சயமாக மாற்றப்படவேண்டும். தொழில் கல்வி விசேடமாக பொருளாதாரத்தில் நேரடியாகப் பங்களிப்பு செய்கின்ற விடயமாகும். பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அமைய வேண்டும். மக்கள் எமது கொள்கைகள் தொடர்பில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அவற்றை செயற்படுத்தவேண்டுமானால் நிறுவன ரீதியான வியூக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்” என ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் இலவசக் கல்வியின் பிள்ளைகள். அதனால் அரச அதிகாரிகளின் சேவையை மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள அவசியமான ஒத்துழைப்பை நாம் வழங்குவோம்.
நீங்களும் உங்கள் சேவையை இந்த அரசாங்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் வழங்குங்கள். எமக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒத்துழைப்பு தருமாறு தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் புதிய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதந்த்ரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இணை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.