நாட்டில் 30 சதவீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாய் காலங்களின் போது நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரியின் காரணமாக ஏனைய பெரும்பாலான பெண்கள் அவற்றை நுகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆவணப்படுத்தும் உத்தியோகத்தர் கே. சிவஜோதி தெரிவித்தார்.
திருகோணமலை ஊடக இல்லத்தில் சர்வதேச மாதவிடாய் தினத்தையொட்டி, ‘ சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் ‘ எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று (08/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நப்கின்ஸ்களுக்கு தற்போதைய அரசாங்கம் 15 சதவீதமான வரியினை அதிகரித்துள்ளமையினால் பெரும்பாலான பெண்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அவற்றை பயன்படுத்தாத பெண்கள் பலரும் பல தொற்று நோய்களுக்குள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மாதவிடாயை பிற்போடும் மாத்திரைகளை பயன்படுத்துவதினால் குடும்ப பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகி வருவதுடன், பாடசாலைகளில் சமத்துவ ரீதியான பாலின கல்வி கற்றலை மேம்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கமானது மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நப்கின்ஸ் 15 சதவீத வரியை எதிர்வரும் நாட்களில் குறைக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
(திருகோணமலை நிருபர்)