
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யோசனைக்கமைவாக சுத்தமான இலங்கை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.
சமூகப் பொறுப்புக்கூறல், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மனப்பான்மை மாற்றத்தை உருவாக்கும் முதன்மை நோக்கங்களுடன் கரையோர மாவட்டங்களை உள்ளடக்கிய கடற்கரைகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ் வேலைத்திட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (05.02.2025) புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
இவ்வேலைத் திட்டம் தேசிய நிகழ்ச்சி திட்டமாகும். இதற்கு சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இதனை ஒரு இடத்தில் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாது, நமது மாவட்டத்தின்
சகல கடற்கரைகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளோம்.
இதன் நோக்கம் பொதுமக்களுக்கு கடலையும் கடற்கரையையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்துவதே ஆகும். எனவே இதனைக் குறித்த தினத்துடன் நிறுத்தி விடாது தொடர்ந்து செய்ய வேண்டும்.
மேலும் மக்கள் மனங்களில் மாற்றம் வரவேண்டும். இதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமானதாகும்” என்றார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 16.02.2025 ஆம் திகதி மாவட்டத்தின் பள்ளிக்குடா, வலைப்பாடு, விநாசியோடை, கௌதாரிமுனை, கிலாலி, ஆனையிறவு ஆகிய கடற்கரைகளில் காலை 7.30மணிக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு கௌதாரிமுனை கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதற்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் மற்றும் ஆளணி பக்கீடு, நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் கண்டவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர்கள், பூநகரி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்த மற்றும் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமுர்த்தி மற்றும் மீன்பிடி சங்க அங்கத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.